சீனாவில் ஒரு நிமிடம் முன்னதாகவே புறப்பட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண்

சீனாவின் குவாங்டொங் மாநிலத்தில் வேலையிடத்தைவிட்டு ஒரு நிமிடத்துக்கு முன்னதாகவே புறப்பட்டதால் பெண் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
வாங் என்றழைக்கப்படும் பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த சோதனை பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாங் ஒரு மாதத்தில் 6 முறை வேலையைவிட்டு முன்கூட்டியே புறப்பட்டுள்ளார். மூவாண்டுகளாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்த வாங் தம்மை வேலையிலிருந்து நீக்கிய நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். அதன் மீது சட்ட நடவடிக்கையும் எடுத்தார்.
நிறுவனம் வாங்கிற்கு எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்காமல் அவரைத் திடீரென்று பணியிலிருந்து நீக்கியது நியாயமில்லை என்று அந்நாட்டு நீதிமன்றம் கூறியது. அதனால் அந்த நிறுவனம் வாங்கிற்கு இழப்பீடு கொடுக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் எனும் விவரம் வெளியிடப்படவில்லை. வேலை ஆரம்பிப்பதற்கு முன்பே வேலை தொடங்கும் ஊழியர்களுக்குச் சலுகைகள் வழங்காதது ஏன் என்று இணையவாசிகள் சிலர் கேள்வி எழுப்பினர்.
வேறு சிலர் நியாயமற்ற முறையில் நடந்துகொண்ட நிறுவனம் தண்டிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.