இலங்கையில் 2026 முதல் பாடசாலை நேரத்தில் மாற்றமா?
2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு என்பன வழமைக்கு திரும்பும்வரை வழமையான நேரப்படியே பாடசாலை நடைபெறும்.
கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டில் 5-13 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாறாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் பருவத்திற்கு ஜனவரி 5 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.
கல்வி சீர்திருத்த செயல்முறை 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு செயல்படுத்தப்படும்.
கல்வி சீர்திருத்த செயல்முறையின் கீழ், தரம் 6 கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21, 2026 அன்று முறையாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெற உள்ளது எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான சுற்றுநிரூபம் இன்று (02) வெளியிடப்படவுள்ளது.






