துருக்கியில் காட்டுத்தீ – 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு – 14 பேர் காயம்

துருக்கி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கடும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 14 பேர் காயமடைந்தனர் என்று வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி திங்கள்கிழமை அறிவித்தார்.
இந்த மரணமடைந்த வீரர்கள், எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் தீயணைப்புப் பணியில் இருந்தபோது, திடீரென காற்றின் திசை மாறியதன் காரணமாக தீயில் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார். மொத்தம் 24 பேர் அந்த சூழ்நிலையில் சிக்குண்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புப் பணிகள் தொடருகின்றன, எனினும் நிலைமை மிகுந்த கடுமையாக உள்ளதாகவும், தீ பரவுவதை கட்டுப்படுத்த பல துறைகளும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
துருக்கியின் மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களில் தற்போது ஐந்து இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது என்று அமைச்சர் மேலும் உறுதிப்படுத்தினார். சூறாவளி வேகத்தில் வீசும் காற்றும், கடுமையான வெப்பமும் தீயை வேகமாக பரவச் செய்யும் முக்கியக் காரணிகளாக உள்ளன.
துருக்கி அரசு மற்றும் அவசர சேவை பணிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.