பிளே ஆப் சுற்றுக்கு செல்ல சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் மிக ஏமாற்றமடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, பிளே ஆஃப் செல்ல இப்போதும் வாய்ப்புள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வென்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சென்னை பிளே ஆஃப்-க்கு தகுதி பெற வேண்டுமென்றால் இனி விளையாடவுள்ள 8 போட்டிகளில் 7ல் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
போட்டியில் 10 அணிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. பொதுவாக, பிளேஆஃப்களுக்குள் நுழைய 14 அல்லது 16 புள்ளிகள் போதுமானது. சென்னை அணி தற்போது 6 போட்டிகளில் ஒரே ஓர் வெற்றி உடன் 5 தோல்விகளை தழுவி, 2 புள்ளிகளை மட்டுமே கொண்டுள்ளது.
இன்னும் 8 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், 8 போட்டிகளில் 7 போட்டிகளி சிஎஸ்கே வெற்றி கண்டால் அது சாத்தியமாகும். ஆனால் அந்த அணியின் பேட்டிங்கை பார்த்தால் அதற்கு ‘வாப்பில்லை ராஜா’ என்றே சொல்ல தோன்றுகிறது. காயம் காரணமாக ருதுராஜ் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, எம்.எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
சரி, அப்போதாவது நிலைமை மாறும் என ரசிகர்களிடையே நம்பிக்கை வந்தது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, அணியின் தொடர்ச்சியான ஐந்தாவது தோல்விக்குப் பிறகு அந்த நம்பிக்கை மீண்டும் போய் விட்டது.
இருப்பினும், அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், தோனி தலைமையில் இருக்கும் சென்னை அணிக்கு இன்னும் ஒரு நம்பிக்கை வாய்ப்பு உள்ளது. அதனை சென்னை அணி சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.