அஸ்வினின் உலக சாதனையை தடுத்த வெஸ்ட் இண்டீஸ்
ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றிருந்தார்.
அதன் மூலம் அவர் மிகப்பெரிய உலக சாதனை ஒன்றை சமன் செய்து இருந்தார்.
இது அஸ்வினின் 11 வது டெஸ்ட் தொடர் நாயகன் விருது ஆகும். இதற்கு முன் முத்தையா முரளிதரன் 11 முறை தொடர் நாயகன் விருது வென்று இருந்தார்.
அதிக முறை டெஸ்ட் தொடர்களில் தொடரின் நாயகன் விருதை வென்றவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஆனால், இது ரவிச்சந்திரன் அஸ்வினின் 12 வது தொடர் நாயகன் விருதாக இருந்திருக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால். அப்போது எந்த வீரருக்கும் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை.
அப்போது ஏற்பட்ட ஒரு நிர்வாக தவறால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பு அந்த விருதை அளிக்க தவறி இருந்தது.
2023 ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது.
இரண்டாவது போட்டியின் முடிவில் யாருக்கும் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை.
அது குறித்து அப்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பிடம் கேட்டபோது, அந்த தொடருக்கு ஸ்பான்சர் செய்த இந்திய நிறுவனம் அதற்கான ஏற்பாட்டை செய்யவில்லை என குற்றம் சுமத்தி இருந்தது.
அந்த விளம்பர நிறுவனமோ, தொடர் நாயகன் விருதை அளிப்பது எங்கள் வேலை அல்ல. அது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்புடையது என கூறி இருந்தது.
அந்த தொடரில் அஸ்வின் மூன்று இன்னிங்க்ஸ்களில் 15 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
மற்ற பந்துவீச்சாளர்களில் யாரும் ஏழு விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தவில்லை. ஜெய்ஸ்வால் 3 இன்னிங்க்ஸ்களில் 266 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனாலும், இரண்டு போட்டிகளில் 15 விக்கெட் வீழ்த்திய வகையில் அஸ்வினுக்கு அப்போது தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அது தவறிப் போனதால் தற்போது வங்கதேச அணிக்கு எதிராக அவர் பெற்ற தொடர் நாயகன் விருது 11 வது விருதாக அமைந்தது.
ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு இருந்தால் இப்போது அவர் முத்தையா முரளிதரன் சாதனையை முறியடித்து 12 முறை டெஸ்ட் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரராகி இருப்பார்.