ஜப்பான், பிலிப்பைன்ஸ்ஸை இரும்புக் கவசம் போல் பாதுகாப்போம்… ஜோ பைடன் உறுதி!
இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள ஜப்பான் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளை இரும்புக் கவசம்போல் செயல்பட்டு அமெரிக்கா பாதுகாக்கும் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜப்பான், பிலிப்பின்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் புதிய முத்தரப்பு கூட்டத்தை வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நேற்று தொடங்கி வைத்தார். பிலிப்பின்ஸ் அதிபர் பொடினான்ட் மார்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கிழக்கு சீன கடலில் சென்காகு தீவுகளை சீனா உரிமை கோருவதால் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அதேபோல் தென் சீனக்கடலில் பிலிப்பின்ஸுக்கும் சீனாவுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த முத்தரப்புக் கூட்டத்தில் மூன்று நாடுகளின் தலைவர்களும் இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அமெரிக்கா போதிய பாதுகாப்பை வழங்கும் என்று ஜோபைடன் உறுதி அளித்தார்.
அந்தக் கூட்டத்தில் இது குறித்து பேசிய அவர், “இந்தோ-பசிபிக் பெருங்கடல் பாதுகாப்பில் புதிய வரலாறு உருவாகவுள்ளது. எதிர்காலத்தில் சுதந்திரமான, வளமான, பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கட்டமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச கட்டமைப்பு மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் பிலிப்பின்ஸுடன் புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கப்படுகிறது. ஜி7 கூட்டமைப்பின்கீழ் இந்த வழித்தடம் உருவாக்கப்படுகிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு இரும்புக் கவசம்போல் செயல்பட்டு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும்” என்று உறுதி அளித்தார்.
முத்தரப்புக் கூட்டம் தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ‘சுதந்திரமான, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியக் கொள்கையை விரும்பும் எந்தவொரு நாடும் இக்கூட்டணியுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த வகையில் ‘ஆசியான்’ ஒற்றுமைக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் கூட்டத்துக்கு சீனா வழக்கம்போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘குறிப்பிட்ட நாடுகள் இணைந்து ஒரு பிராந்திய கூட்டமைப்பை உருவாக்குவது சரியல்ல. ஜப்பான் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் எந்தவொரு நாட்டுடனும் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், குழுவாக இணைந்து மோதலுக்கு வழிவகுக்கக் கூடாது. தெற்கு மற்றும் கிழக்கு சீன பெருங்கடலில் சீனாவால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் நியாயமானவைதான். இதைக் குற்றம் சாட்டும் வகையில் எந்தவொரு நாடு கருத்து தெரிவித்தாலும் அதை சீனா நிராகரிக்கிறது’ என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.