நாங்கள் அஞ்சவில்லை – இராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா பதிலடி

“நாங்கள் போருக்கு அஞ்சுவதில்லை. எங்கள் மக்களைப் பாதுகாக்க எதையும் செய்ய தயார்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்-ஷாரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலளித்துள்ள, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவிலுள்ள சிரியாவின் ஸ்வீடா மாகாணத்தில், ட்ரூஸ் சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த மக்களின் மீது, சிரிய அரசுக்கு ஆதரவான சில இஸ்லாமிய குழுக்கள் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தன. இதில் 200க்கும் மேற்பட்ட ட்ரூஸ் மக்கள் உயிரிழந்தனர்.
ட்ரூஸ் சிறுபான்மை மக்கள், இஸ்ரேல் மற்றும் லெபனானிலும் வாழ்வதால், அவர்களுக்குத் துணைநிலையாக, இஸ்ரேல் ராணுவம் நேற்று சிரிய அரசுப்படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவ தலைமையகம் குறிவைக்கப்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து, துருக்கி மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சியின் விளைவாக, இரு தரப்பும் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தின.
இந்த சூழ்நிலையின் பின்னணியில், சிரியா அதிபர் அகமது அல்-ஷாரா கூறியதாவது:
“நாங்கள் போருக்கு அஞ்சுவதில்லை. எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்துள்ளோம். சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தயக்கமின்றி போராட தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என்பது மிகப் பெரும் தவறாகும்.” என்றார்.