காவிரியிலிருந்து அட்டவணைப்படி நீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் அறிவுறுத்தல்!
காவிரியிலிருந்து அட்டவணைப்படி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அணை கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்ட சூழலில் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் அமைச்சகமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16 வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் கருநாடக அரசின் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது; ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.1 டி.எம்.சி நீரை முழுமையாக திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது..
ஜூலை மாதத்திற்கான 35 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் திறந்துவிடவும் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதற்கு இதுவரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீர் வழங்கப்பட்டுள்ளது என கர்நாடகா அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரியிலிருந்து அட்டவணைப்படி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.