இறுதி போட்டிக்காக இந்திய அணியில் இணையும் வாஷிங்டன் சுந்தர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியின்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவரது காயத்தின் வீரியம் குறித்து சரியான தகவல் வெளியாத நிலையில், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அக்சார் பட்டேலுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்படும் காயம் (hamstring) ஏற்பட்டுள்ளதாகவும், உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ளதால் பிசிசிஐ கவலை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்வு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர், கடைசியாக ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.