இனி பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இல்லை
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விராட் கோலி. இவர் பிரபல பாலிவுட் நடிகை அனுஷா சர்மாவை காதலித்து வந்த நிலையில், கடந்த 11 டிசம்பர் 2017 அன்று இரு வீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாமிகா என்கிற பெண் குழந்தையும், ஆகாய் என்கிற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜொலித்தது வரும் கோலியின் சொத்து மதிப்பு ரூ. 1050 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனுஷா சர்மாவின் சொத்து மதிப்பு ரூ. 306 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இருவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1300 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வரும் கோலியை முந்தி இருக்கிறார் முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா. மேலும், இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் அவர் பிடித்துள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, குஜராத்தில் உள்ள ஜாம்நகர் ராயல் சிம்மாசனத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார். தசரா பண்டிகையை ஒட்டி நவாநகரின் மஹாராஜா ஜம்சாஹேப் வெளியிட்ட அறிவிப்பில், “பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்து வெற்றிபெற்ற தினத்தை தசரா பண்டிகை குறிக்கிறது. இன்று, தசரா அன்று, எனது வாரிசாக ஏற்றுக்கொண்ட அஜய் ஜடேஜாவுக்கு நன்றி, எனது இக்கட்டான பிரச்சனைகளில் ஒன்றிற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளதால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக்கொண்டது உண்மையிலேயே ஒரு வரம்” என்று அவர் கூறினார்.
மஹாராஜா ஜம்சாஹேப் தனது அறிவிப்பின் ஜாம்நகர் அரச குடும்பத்திற்கும் கிரிக்கெட் உலகிற்கும் இடையே ஏற்கனவே உள்ள ஆழமான தொடர்பை உறுதிப்படுத்து இருக்கிறார். உள்நாட்டில் நடைபெறும் ரஞ்சி டிராபி மற்றும் துலீப் டிராபி ஆகிவை முறையே அஜய் ஜடேஜாவின் உறவினர்களான கே.எஸ்.ரஞ்சித்சின்ஜி மற்றும் கே.எஸ் துலீப்சின்ஜி ஆகியோரின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
1992 மற்றும் 2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 196 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜடேஜா, அரச குடும்பத்தின் நேரடி வம்சாவளி ஆவார். அவரது தந்தை, தௌலத்சிங்ஜி ஜடேஜா, ஜாம்நகரில் இருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கு கேப்டனாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான மஹாராஜா ஜம்சாஹேப், 1966 இல் நவநகரின் தலைமைப் பதவியைப் பெற்றார். குடும்பத்தின் பரம்பரையானது 1907 முதல் 1933 வரை நவாநகரை ஆட்சி செய்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ரஞ்சித்சிங் ஜடேஜாவிடம் உள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், அஜய் ஜடேஜா கிரிக்கெட் ஆடுகளத்தில் இருந்து அரச மாளிகைக்கு மாறி, விளையாட்டு மற்றும் சேவை ஆகிய இரண்டிலும் பின்னிப்பிணைந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் புதிய இன்னிங்ஸைத் தொடங்க உள்ளார். மேலும், ரூ. 1,450 கோடிக்கு மேல் மதிப்பிடப்பட்ட சொத்துக்கும் அவர் சொந்தக்காரர் ஆகிறார். இதன் மூலம் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் அஜய் ஜடேஜா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.