வியட்நாமின் செல்வாக்கான கம்யூனிஸ்ட் தலைவர் நுயென் பு ட்ரோங் காலமானார்
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், நாட்டின் செல்வாக்கு மிகுந்த தலைவருமான நுயென் பு ட்ரோங் காலமானார். அவருக்கு வயது 80.
வியட்நாமின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், நாட்டின் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதியுமான நுயென் பு ட்ரோங் பல மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகம் இன்று (ஜூலை 19) தெரிவித்தது. “கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங் ஜூலை 19 அன்று முதுமை மற்றும் கடுமையான நோய் காரணமாக மத்திய ராணுவ மருத்துவமனையில் காலமானார்” என்று நான் டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
2011-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து நுயென் பு ட்ரோங், வியட்நாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். வியட்நாமின் ஒற்றைக் கட்சி அரசியல் அமைப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்த பணியாற்றியவர் அவர். வியட்நாமிய அரசியலில் அவர் முக்கிய பங்கை வகிப்பதற்கு முன், அப்போதைய பிரதமர் குயன் டான் டங் தலைமையிலான ஆட்சியில், அதிகாரம் அரசாங்கப் பிரிவை நோக்கி நகர்ந்த நிலையில், அதனை தடுத்து கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியவர் நுயென் பு ட்ரோங் என்பது குறிப்பிடத்தக்கது.