அமெரிக்க எதிர்ப்புப் போரில் வெற்றி பெறுவது நிச்சயம் ; வட கொரியாவின் கிம் சபதம்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் தமது நாடு வெற்றிபெறும் என்று கூறியிருக்கிறார். கொரியப் போர் நிறுத்த ஆண்டுநிறைவை நாடு அனுசரிக்கும் நிலையில் அவர் அவ்வாறு தெரிவித்தார். வடகொரியாவின் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ (KCNA) அந்தத் தகவலை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) வெளியிட்டது.
வடகொரியாவை வளமிக்க நாடாக உருவாக்கும் உன்னத இலக்கில் நாடும் நாட்டு மக்களும் வெற்றிபெறுவது நிச்சயம் என்று கிம் உறுதிகூறினார். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் கௌரவமான முறையில் அந்த வெற்றியை வடகொரியா எட்டும் என்றார் அவர்.
1953ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி, மூவாண்டு நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர வடகொரியா அமெரிக்காவுடனும் சீனாவுடனும் உடன்பாட்டைச் செய்துகொண்டது. தென்கொரியாவுக்கு ஆதரவளித்த ஐக்கிய நாட்டுப் படைகளைப் பிரதிநிதித்து அமெரிக்க ராணுவ ஜெனரல்கள் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
ஜூலை 27ஐ “வெற்றி நாள்” என்று வர்ணிக்கிறது வடகொரியா. தென்கொரியா அன்றைய தினம் எந்தப் பெரிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்வதில்லை.
வடகொரியா தற்போது ரஷ்யாவுடன் இணைந்து உக்ரேனில் போர் தொடுக்கிறது. ஆயிரக்கணக்கான வடகொரியத் துருப்புகள் ரஷ்யாவின் கர்ஸ்க் வட்டாரத்தில் சண்டையிடுகின்றன. மாஸ்கோவுக்கு ஆயுதங்களையும் கொடுத்துள்ளது பியோங்யாங். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வடகொரியா கூடுதல் துருப்புகளை அனுப்பக்கூடும் என்கிறது தென்கொரியா.