சிங்கப்பூரில் கடும் வெப்பத்தால் தீவீர அளவை எட்டும் புற ஊதா குறியீடு – மக்களுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூரில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளதாகவும், புற ஊதா (UV) குறியீடு தீவிர அளவை எட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் மதியம் 12.15 மணியளவில் புற ஊதா குறியீடு 11 ஆக இருந்தது, பின்னர் மதியம் 12.45 மணியளவில் அது அதிகபட்சமாக 12 ஐ தொட்டது. அதன் பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு, புற ஊதா குறியீடு 10 ஆகக் குறைந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதன் காரணமாக சூரிய ஒளியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதிக சன்ஸ்கிரீன் என்னும் வெயில் பாதிப்பை கட்டுப்படுத்தும் மருந்து பூசிக்கொள்ளவும், குடைகள் மற்றும் தொப்பிகளை பயன்படுத்தவும் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக, 8 மற்றும் 10 க்கு இடைப்பட்ட UV குறியீடு மிக தீவீரமாக கருதப்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட UV குறியீடு கடும் தீவிரமானதாகக் கருதப்படுகின்றன.
இதனால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும் அச்சம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் UV குறியீடு அதிகரித்தால், தோல் மற்றும் கண்ககளுக்கு தீங்கு விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் NEA இன் இணையதளம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நேற்று மதியம் 2 மணியளவில் வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸ் முதல் 35.7 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.