வரிகள் இடைநிறுத்தப்பட்டதால்,வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்கா வியட்நாம் – ஹனோய்

வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்காவும் வியட்னாமும் ஒப்புக்கொண்டுள்ளன.
பெரும்பாலான நாடுகளுக்கான தனது வரிவிதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. வியட்னாம் மீது விதிக்கப்பட்ட 46% வரியும் அதில் அடங்கும்.
அதற்கு சில மணிநேரம் கழித்து வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 10) வியட்னாம் அரசாங்கம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்தது.
கூடுமானவரை வர்த்தகத்துக்கு இடையூறாக இருக்கக்கூடிய வரி தொடர்பற்ற அம்சங்களை அகற்றுவது குறித்து இரு நாடுகளும் ஆலோசிக்கும் என்று ஹனோய் அறிக்கைமூலம் தெரிவித்தது. வியட்னாம் துணைப் பிரதமர் ஹோ டுக் ஃபொக், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் இருவருக்கும் இடையான சந்திப்பு வாஷிங்டனில் நடைபெற்ற பிறகு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இரு தரப்பு வர்த்தகம் குறித்தும் இரு தரப்பு உறவில் இருக்கக்கூடிய பெரிய அளவிலான பொருளியல் வாய்ப்புகள் குறித்தும் திரு ஃபொக்குடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் கிரியர் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தார்.
கூடுதல் வரிவிதிப்பை அமெரிக்கா ஒத்திவைத்திருந்தாலும் அந்நாட்டில் இறக்குமதியாகும் கிட்டத்தட்ட எல்லா பொருள்களுக்குமான அடிப்படை 10% வரிவிதிப்பில் மாற்றம் இருக்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.