ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவும் ; பைடன் உறுதி
தெஹ்ரானில் ஹமாசின் உயர்மட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 1ஆம் திகதி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் பேசியபோது, ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் வாஷிங்டன் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தொலைபேசியில் பைடன் பேசியபோது, அவருடன் இருந்த துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், “அந்த வட்டாரத்தில் நிகழும் பரவலான பதற்றங்களைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து முயலும்,” என்றும் வலியுறுத்தினார்.
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்கரை கொன்று விட்டதாக இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க, இஸ்ரேலியத் தலைவர்களுக்கு இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது குறித்து நெட்டன்யாகுவின் அரசாங்கம் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் பாலஸ்தீனப் போராளிக் குழு இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளது.
ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி உள்ளிட்ட ஈரானின் ஆதரவு பெற்ற அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தனது கடப்பாட்டை பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று நெட்டன்யாகுவுடன் அமெரிக்க அதிபரின் தொலைபேசி அழைப்பு குறித்த அறிக்கையில் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
“இலக்கை நோக்கி பாய்ச்சப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற இஸ்ரேல் சந்திக்கக்கூடிய மிரட்டல்களுக்கு எதிராக ஆதரவளிக்கவும் அமெரிக்காவின் புதிய தற்காப்பு ராணுவ ஆயுதங்களை வழங்கி ஆதரிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் அதிபர் விவாதித்தார்,” என்று வெள்ளை மாளிகை கூறியது