அமெரிக்காவின் வரிகள்; சீனாவின் அழைப்பை நிராகரித்த அவுஸ்திரேலியா!

அமெரிக்காவின் வரிகளை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவதற்கான பீஜிங்கின் முன்மொழிவை அவுஸ்திரேலியா இன்று (10) நிராகரித்தது.
அதற்கு பதிலாக அதன் வர்த்தகத்தை தொடர்ந்து பன்முகப்படுத்துவதாகவும், அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதாகவும் அவுஸ்திரேலியா கூறியுள்ளது.
உலகில் நடக்கும் எந்தவொரு போட்டியிலும் நாங்கள் சீனாவுடன் கைகோர்க்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, இந்தியா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அவுஸ்திரேலியா தனது பொருளாதார மீள்தன்மையை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
எனினும் இந்த அறிவிப்பானது அவுஸ்திரேலியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஏனெனில் அது தனது பொருட்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை சீனாவிற்கு அனுப்புகிறது.
அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் அவுஸ்திரேலியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 5% க்கும் குறைவாகவே உள்ளன.
அமெரிக்காவிற்கும் பிற முக்கிய பொருளாதாரங்களுக்கும் இடையிலான வரிகள் மற்றும் பிற வர்த்தக கட்டுப்பாடுகள் குறித்த தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை, நாட்டில் வணிக முதலீடு மற்றும் வீட்டுச் செலவு முடிவுகளில் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இதனிடையே, அதிர்ச்சியூட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (09), பல நாடுகள் மீதான அதிக வரிகளை தற்காலிகமாகக் குறைப்பதாகக் கூறினார்.
ஆனால் சீனாவை குறிவைத்து தொடர்ந்து வரிகளை உயர்த்தினார்.
அதன்படி 104% இலிருந்து 125% ஆக வரி உயர்த்தப்பட்டது.
இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தகப் போரை மேலும் அதிகரித்தது.
இதனிடையே, சீனா அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 84% பதிலடி வரிகளை விதித்துள்ளது.
இது பீஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தகப் போரை ஆழப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.