அமெரிக்காவில் தங்குமிடமில்லாமல் லட்ச கணக்கானோர் தவிப்பு – கடும் நெருக்கடியில் மக்கள்
அமெரிக்காவில் ஜனவரியில் ஒரு இரவில், ஏறக்குறைய 771,480 பேருக்குத் தங்குமிடமில்லாமல் போயுள்ளதாக வீடமைப்பு, நகர வளர்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 18 சதவீதம் அதிகம் என திணைக்கள தகவலில் தெரியவந்துள்ளது.
கட்டுப்படியாகாத வீட்டு விலை, விலைவாசி உயர்வு, இனவாதம், இயற்கைப் பேரிடர்கள், அதிகரிக்கும் வெளிநாட்டினரின் வருகை ஆகியவை அமெரிக்காவில் குடியிருக்க வீடுகள் இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்களாகியுள்ளது.
இவ்வாண்டு 771,000க்கும் அதிகமானோர் குடியிருக்க வீடுகளின்றி இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அவர்களில் 32 சதவீதமானோர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களாகும். வயதின் அடிப்படையில் 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளே வீடுகளின்றி அதிகம் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பிரிவினரிடையே வீடின்றித் தவிப்போரின் விகிதம் 33 சதவீதம் உயர்ந்ததாகவும் கூறப்பட்டது.
நகர்ப்புறத் தெருக்களில் கூடாரம் அமைத்து வாழும் போக்கு அமெரிக்காவில் தற்போது வழக்கமாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.