சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் எதிர்பாராத அனர்த்த நிலைமைகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து விசேட கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத சந்தர்ப்பத்தில் அல்லது ஏதேனும் காரணத்தினால் பரீட்சைக்குச் செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்வதற்காக நேரடித் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இன்று இதனைக் கூறினார்.
இதற்கமைய, 117 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக மேலும் 4 புதிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி,0113668020 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0113668100 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ மாணவர்கள் அவசர நிலைமைகளை அறிவிக்க முடியும்.
அத்துடன் 0113668013 என்ற தெலைபேசி இலக்கத்தை அல்லது
0113668010 என்ற என்ற தெலைபேசி இலக்தையும் அவரச நிலைமைகளின் போது மாணவர்கள் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னிருந்து, பரீட்சை நிறைவடைந்து இரண்டு நாட்கள் வரை, அதாவது வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் வரை பாதுகாப்புப் பிரிவினர், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய பிரிவுகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புயல் காரணமாக முக்கியமான ஆவணங்களை இழந்த தனியார் பரீட்சார்த்திகள் கிராம அலுவலரின் கையொப்பத்துடனான கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களையும், பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபரின் கையொப்பத்துடனான இரண்டு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களையும் தற்காலிக ஆவணமாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் பரீட்சை முடிவடைந்த மூன்று மாதங்களுக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.





