இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை : ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நிவாரண சேவைகளை வினைத்திறனாக அமுல்படுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அவசர காலத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்தந்த மாகாணங்களின் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்காலத்தில் நிவாரணங்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். அதுவரை மக்கள் அவதானமாக இருக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிவாரண சேவைகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, உரிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு மேலும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
584 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 பேர் பாதுகாப்பாக 23 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தின் ஊடாக அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அழைப்பு அறை 117 மற்றும் 0112 136 136, 0112 136 222, 0112 670 002 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் அவசர நிலைமைகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம்.