மியான்மர் இனப்படுகொலை வழக்கை ஜனவரியில் நடத்த ஐ.நாவின் உச்ச நீதிமன்றம் திட்டம்
மியான்மர்(Myanmar) தனது ரோஹிங்கியா(Rohingya) சமூகத்தினருக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டும் ஒரு வழக்கில் சர்வதேச நீதிமன்றம்(ICJ) அடுத்த மாதம் பொது விசாரணைகளை நடத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதல் கட்ட விசாரணைகளின் போது இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின்(OIC) ஆதரவுடன் 2019ல் வழக்கைத் தாக்கல் செய்த காம்பியா(Gambia) ஜனவரி 12 முதல் 15 வரை தனது வாதங்களை முன்வைக்கும்.
இதனை தொடர்ந்து இனப்படுகொலை செய்ததை மறுத்து வரும் மியான்மர் ஜனவரி 16 முதல் 20 வரை பதிலளிக்கும்.
இந்நிலையில், ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட சாட்சியங்களுக்காக சர்வதேச நீதிமன்றம் மூன்று நாட்களை ஒதுக்கியுள்ளது.
மேலும், இந்த விசாரணைகள் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிலிருந்து விலகி மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெறும்.
இந்த வழக்கு 2017ம் ஆண்டு ரக்கைன்(Rakhine) மாநிலத்தில் மியான்மரின் இராணுவ அடக்குமுறையை மையமாகக் கொண்டுள்ளது, இதன் போது கொலைகள், பாலியல் வன்முறை மற்றும் கிராமங்கள் எரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





