கைது இல்லாமலே கைபேசி பறிமுதல்: பிரித்தானியாவின் புதிய நடவடிக்கை
பிரித்தானியாவிற்குச் சிறு படகுகள் மூலம் வரும் அடைக்கலக் கோரிக்கையாளர்களின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகளைக் கைது நடவடிக்கை எதுவுமின்றி உடனடியாகப் பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கென்ட் (Kent) பகுதியில் உள்ள மேன்ஸ்டன் (Manston) செயலாக்க மையத்திற்கு வரும் அகதிகள் இன்று முதல் இத்தகைய சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக, அவர்களின் தொலைபேசி தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
ஆடைச் சோதனை மட்டுமன்றி, சிம் கார்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய அகதிகளின் வாய்க்குள் சோதனை நடத்தவும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஊடுருவல் சோதனைகள் மனிதாபிமானமற்றவை என்றும், இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





