ரஷ்யாவின் முதல் கடல் ஆளில்லா விமானத் தாக்குதலில் மூழ்கடிக்கபட்ட உக்ரைனின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல்

ரஷ்யா-உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நடந்து வருகிறது. போரை நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தற்போது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று 600 ஆளில்லா விமானங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதில் வீடுகள், பள்ளிக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன.
இந்தத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.உக்ரைன் கடற்படையில் மிகப்பெரிய சிம்பெரோபோல் என்ற அதிநவீன கப்பல் உள்ளது. டானூப் என்ற இடத்தில் இந்தக் கப்பலை குறிவைத்து ரஷ்யப் படைகள் ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை வீசி கடுமையாகத் தாக்குதல் நடத்தின. இதில் அந்தக் கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இத்தகைய ட்ரோன் தாக்குதலை முதல் முதலாக நடத்தியுள்ளது. இதனை உக்ரைன் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஒரு பணியாளர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். மற்ற பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், காணாமல் போன மாலுமிகளைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.