அமெரிக்காவில் பரபரப்பு – டிரம்ப் மீதான கொலை முயற்சியை முறியடித்த அதிகாரிகளுக்குப் பாராட்டு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அதனை விரைவாக முறியடித்த ரகசியச் சேவைப் பிரிவு பாராட்டுப் பெற்றுள்ளது.
டிரம்ப் புளோரிடா மாநிலத்தில் கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 455 மீட்டர் தொலைவில் இருந்த புதர்களில் சந்தேக நபர் மறைந்திருந்தார். அங்கு ஒரு துப்பாக்கியைக் கண்ட ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரி சந்தேக நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்.
4 முறை துப்பாக்கி சுடப்பட்டது. ராயன் வீஸ்லி ரவ்த் எனும் சந்தேக நபர் பதிலுக்குத் தாக்கினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் துப்பாக்கி, 2 பைகள், GoPro கேமரா போன்ற பொருள்களை விட்டுவிட்டு கருப்பு வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சந்தேக நபரின் வாகன உரிம எண்ணைப் படமெடுத்தார்.
Interstate 95 நெஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த சந்தேக நபரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர் ஏன் டிரம்ப்பைப் படுகொலை செய்ய முயன்றார் என்பது தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.
படுகொலை முயற்சியை முறியடிக்கத் தேவையான அனைத்தையும் ரகசியச் சேவைப் பிரிவு சரியாக செய்தது என்று பொலிஸார் பாராட்டியுள்ளர்.