மொஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இன்று (24) இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோவின் யெலெட்ஸ்காயா (Yeletskaya) வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை அவதானித்த போக்குவரத்து பொலிஸார், அவரை சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது அந்த நபர் தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும், அருகில் நின்றிருந்த மற்றொரு நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இதே பகுதியில் ரஷ்ய இராணுவ ஜெனரல் பானில் சர்வாரோவ் (Fanil Sarvarov) கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட நிலையில், இந்தத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உக்ரைனிய உளவுத்துறையின் தொடர்பு குறித்து ரஷ்ய புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





