இந்தியாவில் YouTube பார்த்து போலி பணத்தாள்கள் அச்சிட்ட இருவர் கைது !
சொந்தமாக அச்சடித்து, ரூ.30,000 மதிப்புள்ள போலி பணத்தாள்களைப் புழக்கத்தில் விட்டது தொடர்பில் இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
சதீஷ் ராய், பிரமோத் மிஸ்ரா என்ற அவ்விருவரும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் பத்து ரூபாய் முத்திரைத் தாள்களை வாங்கி, அவற்றைக் கொண்டு கணினி அச்சுப்பொறி மூலம் ரூ.500 போலி பணத்தாள்களை அச்சிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
மிர்சாப்பூரில் அவர்கள் அந்த முத்திரைத் தாள்களை வாங்கினர்.போலி பணத்தாள்கள் அனைத்தும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
அவ்விருவரும் சோன்பத்ராவிலுள்ள ராம்கர் சந்தைக்கு ரூ.10,000 போலி பணத்தாள்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது.
“அவர்களிடமிருந்து ரூ.500 மதிப்புடைய 20 போலி பணத்தாள்களைப் பறிமுதல் செய்துள்ளோம். அவை உண்மையான பணத்தாளா, போலிப் பணத்தாளா எனக் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தன,” என்று கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கலு சிங் தெரிவித்தார்.
YouTube காணொளிகள் மூலம் போலி பணத்தாள்களை அச்சிடுவது குறித்து அவர்கள் தெரிந்துகொண்டதாகக் கூறப்பட்டது.அவர்களிடமிருந்து ஒரு கார், அச்சுப்பொறிகள், மடிக்கணினி, 27 முத்திரைத்தாள்கள் ஆகியவற்றையும் காவல்துறை கைப்பற்றியது