தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது
துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னை வரும் ஸ்ரீலங்கன் விமானத்தில் பெரிய அளவிலான தங்கம் கடத்தப்படுவதாகவும், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் இந்த கடத்தலில் ஈடுபடுவதாகவும், சென்னை டிநகர் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இலங்கை மற்றும் துபாய் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.
சுங்கச் சோழனை அனைத்தையும் முடித்துவிட்டு வெளியில் வந்தார்.அவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணித்தனர்.
அந்தப் பயணி, விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்து, ஆட்டோ ஒன்றில் ஏறி சென்னை புறநகர் பகுதிக்கு சென்றார். மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளும், மற்றொரு ஆட்டோவில் அவரை பின்தொடர்ந்தனர்.
அந்தப் பயணி சென்னை புறநகரில் அவரது வீட்டு அருகே சென்ற நிலையில், ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய போது, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.
அப்போது அவரது பேன்ட்டில் நிறைய பைகள் இருந்தன. மேலும் அவர் அணிந்திருந்த முழங்கால் பட்டையில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் இருந்து ரூ.8.30 கோடி மதிப்புடைய 13.3 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அந்தக் கடத்தல் பயணியை கைது செய்தனர்.
அதோடு அவரை சென்னை விமான நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில்,கொழும்புவில் இருந்து,சென்னை வந்த, இலங்கையைச் சேர்ந்த பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவரது உடமைகளை சோதனை செய்தபோது, ரூ.6.20 கோடி மதிப்புடைய 10.6 கிலோ எடையிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரு இலங்கை பயணியரிடமிருந்து மொத்தம், ரூ.14.5 கோடி மதிப்புடைய 23.4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், இலங்கை பயணிகள் இருவரையும் கைது செய்து, சென்னை டிநகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் கொண்டு சென்று விசாரணை நடத்துகின்றனர்.
இவர்கள் இருவரும் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை மத்திய வருவாய் புலனாய்வு தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தப் பயணிகள் இருவரும் சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் சோதனையில் சிக்காமல் வெளியில் சென்றது எப்படி என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.