இஸ்ரேலிய கப்பல்கள், விமானங்களுக்கான வான்வெளி மற்றும் துறைமுகங்களை மூடிய துருக்கி
துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன், தனது நாடு இஸ்ரேலுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை முற்றிலுமாக துண்டித்துவிட்டதாகவும், காசாவில் நடந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் வான்வெளியை இஸ்ரேலிய விமானங்களுக்கு மூடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காசா குறித்த துருக்கிய நாடாளுமன்றத்தில் பேசிய ஃபிடன், இஸ்ரேல் “கடந்த இரண்டு ஆண்டுகளாக காசாவில் இனப்படுகொலை செய்து வருகிறது, அடிப்படை மனிதாபிமான விழுமியங்களை உலகத்தின் கண்களுக்கு முன்பாகவே புறக்கணித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இஸ்ரேலுடனான எங்கள் வர்த்தகத்தை நாங்கள் முற்றிலுமாக துண்டித்துவிட்டோம். அவர்களின் விமானங்கள் எங்கள் வான்வெளியில் நுழைய நாங்கள் அனுமதிக்கவில்லை, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லும் கொள்கலன் கப்பல்கள் எங்கள் துறைமுகங்களுக்குள் நுழைய நாங்கள் அனுமதிக்கவில்லை” என்று ஃபிடன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பதட்டமான உறவுகளுக்கு மத்தியில் துருக்கிய வெளியுறவு அமைச்சரின் இந்த கண்டனம் வந்துள்ளது,
கடந்த ஆண்டு மே மாதம், நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்கக் கோரி, துருக்கி இஸ்ரேலுடனான நேரடி வர்த்தக உறவுகளை துண்டித்தது. 2023 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 7 பில்லியன் டாலர் வர்த்தகத்தை மேற்கொண்டன.





