கிறிஸ்துமஸ்,புத்தாண்டு தாக்குதல் திட்டம் முறியடிப்பு- துருக்கியில் 115 பேர் கைது
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகளை இலக்குவைத்து திட்டமிடப்பட்ட தாக்குதல்களை துருக்கிய பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் நகரம் முழுவதும் 124 இடங்களில் பாரிய சோதனைகள் நடத்தப்பட்டதில், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் அமைப்பு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் 22 சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் துருக்கி முழுவதும், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த உளவுத்துறை நடவடிக்கையிலும் ஐஎஸ் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரியாவுடன் நீண்ட எல்லை பகிர்ந்து கொள்ளும் துருக்கி, ஐஎஸ் தொடர்புடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





