300 வருடமாக கிரீன்லாந்தை ஆய்வு செய்யும் அமெரிக்கா – ட்ரம்பின் சர்ச்சைக் கருத்து!
கீரின்லாந்தை ட்ரம்ப் கையகப்படுத்த முயற்சிப்பதை டென்மார்க் தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்ற நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பிற்கு அந்தத் தீவு மிகவும் முக்கியமானது என்று விவரித்த அவர், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்கா கிரீன்லாந்தை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பிற்காக எங்களுக்கு அது தேவை” என்று மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள அந்த தீவு அமெரிக்காவிற்கு வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்தின் கனிம வளத்தை அமெரிக்கா பிரித்தெடுக்க முயற்சிக்கவில்லை, மாறாக ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள தீவைப் பயன்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார். குறித்த நாடுகள் அங்கு கப்பல்களை கொண்டுள்ளதாகவும் விவரித்துள்ளார்.
கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு ஏன் தேவை?
உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்ட இடமாக உள்ளது. அங்கு வெறும் 57000 மக்களே வசிக்கிறார்கள். குறிப்பாக இனுயிட் (Inuit) என அழைக்கப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களே இங்கு வசிக்கின்றனர்.
அதன் இயற்கை வளங்கள் மற்றும் புவியியல் இருப்பிடம் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்கிறது.
இந்நிலையில் ட்ரம்ப் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்தே இந்த தீவை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறார். ஆனால் ட்ரம்ப் மட்டுமே கிரீன்லாந்தை விரும்பும் அமெரிக்க ஜனாதிபதி அல்ல. இதற்கு முன்னதாக ஆட்சி செய்த பல தலைவர்கள் இந்த தீவை கைப்பற்ற முனைப்பு காட்டியுள்ளனர்.
குறிப்பாக 1846 இல் அமெரிக்கா அதனை வாங்க முயன்றது. மீண்டும் 1946 இல் £970 மில்லியனுக்கு பேரம் பேசியது. இருப்பினும் அமெரிக்காவின் திட்டங்கள் தவிடுபொடியாகின.
எவ்வாறாயினும் பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியன் இந்த பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியிருந்தது. இதனை முறியடிக்க அமெரிக்காவும் தனது இராணுவ தளத்தை அங்கு அமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்கின் ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கா துலே விமானப்படை தளத்தை அங்கு இயக்குகிறது. இதன் மூலம் சோவியத் யூனியனைத் தாக்க அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களை ஆர்க்டிக் முழுவதும் அனுப்பி வழிநடத்துகிறது.
150 மைல் தொலைவில் ஒரு பனிப்பாறையில் புதைக்கப்பட்ட மற்றொரு இரகசிய தளமும் அங்கு அமையப்பெற்றுள்ளது. பனிப்படலத்தின் வழியாக ஏவக்கூடிய அணுவாயுதங்கள் இந்த தளத்தில் இருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





