30,000 பக்க ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்க நீதித்துறை; எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 30,000-க்கும் அதிகமான புதிய புலனாய்வு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்களில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் முன்பு கருதப்பட்டதை விட அதிக முறை பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், எப்ஸ்டீனின் உதவியாளர் கிஸ்லேன் மெக்ஸ்வெல்லிடம் “புதிய தோழிகளைத் தேடித் தாருங்கள்” என பால்மோரல் மாளிகையிலிருந்து அனுப்பிய சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்களும் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், எப்ஸ்டீன் சிறையிலிருந்து எழுதியதாகப் பரவிய கடிதம் ஒன்று போலியானது என எப்.பி.ஐ (FBI) உறுதிப்படுத்தியுள்ளது. பல முக்கிய பெயர்கள் மறைக்கப்பட்ட நிலையில், இந்த ஆவணங்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆவணங்களில் பெயர் இடம்பெறுவது மட்டுமே ஒருவரை குற்றவாளியாக்காது எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.





