வியட்நாமில் கோல்ப் கிளப் கட்டும் ட்ரம்ப் – வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்

வியட்நாமில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குடும்பத்தின் மூலம் கோல்ப் கிளப் மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களுக்கு சிறிய தொகைப் பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த கோல்ப் மைதானத் திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், ட்ரம்ப் நிறுவனத்திற்கு 5 மில்லியன் டொலர்களை உரிம கட்டணமாகச் செலுத்தி செயல்படுத்தவுள்ளது.
ட்ரம்பின் இந்த ஒப்பந்தம், வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு, ஒரு சதுர மீட்டருக்கு 12 டொலர் முதல் 30 டொலர் வரை இழப்பீடு கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில், நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு 3,200 டொலர் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு. 990 ஹெக்டேர் நிலம் வாழைப் பழங்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்குப் பல தரப்பிலிருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.