கமலா ஹாரிஸின் நீட்டிக்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை ரத்து செய்த டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிபர் டோனல்ட் டிரம்ப் நிறுத்தவுள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.அது தொடர்பான கடிதத்தின் நகல் ஒன்றை மேற்கோள் காட்டி அது அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
துணை அதிபர்களாக உள்ளவர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னர் ஆறு மாத காலம் வரை அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்.
ஜோ பைடன் அதிபராக இருந்தபோது அதனை ஓராண்டுக்கு நீட்டித்ததாக சிஎன்என் கூறியது.
இந்நிலையில், இதுவரை வழங்கப்பட்டு வரும் ரகசியச் சேவைப் பாதுகாப்பு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று தெரிவித்து ஹாரிசுக்கு அனுப்பப்பட்ட கடித நகலை அது காட்டியது.
அந்தத் தகவலை உறுதிசெய்ய ஹாரிசையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடியபோது அவர்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை என்றது சிஎன்என்.
2024 அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டவர் ஹாரிஸ். 2028 அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்குவதற்கான சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை.
தம்மை விமர்சனம் செய்து குறைகூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் போன்ற பலருக்கும் டிரம்ப் பாதுகாப்பை ரத்து செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம், முன்னாள் அதிபர் பைடனின் பிள்ளைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் அவர் மீட்டுக்கொண்டார்.