உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிகப்பெரிய தாக்குதல்களுக்குப் பிறகு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்

ரஷ்யா, இதுவரை இல்லாத அளவுக்கு உக்ரேனை மிக மோசமாகத் தாக்கியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) முற்பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணைகளும் வானூர்திகளும் மழை போல உக்ரேன் தலைநகரைத் தாக்கின. நான்கு பேர் இதில் உயிரிழந்தனர். அரசாங்க அலுவலகங்கள் தீப்பற்றி எரிந்தன.
இதையடுத்து ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ”தற்போதைய சூழ்நிலை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை,” என்றார்.மாஸ்கோமீது புதிய தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, அமெரிக்காவிடமிருந்து வலுவான தக்க பதிலை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிபர் டிரம்ப்புக்கும் அதிபர் புட்டினுக்கும் இடையே நடைபெற்ற சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
கியவ் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் உக்ரேனிய அமைச்சரவை கூடும் அரசாங்கக் கட்டடத்தின் கூரையிலிருந்து தீ கிளம்பியது. மூன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் இம்முறைத்தான் கியவ் அரசாங்கக் கட்டடங்கள் தாக்கப்பட்டுள்ளன.