அமெரிக்கா–டென்மார்க் மோதல் தீவிரம்: நேட்டோவில் புதிய பதற்றம்
நேட்டோ மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தைப் பாதுகாக்க கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் (Stephen Miller) தெரிவித்துள்ளார்.
சி.என்.என் (CNN) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் யாரும் போரிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் கவனம் இப்போது கிரீன்லாந்து பக்கம் திரும்பியுள்ளது.
கிரீன்லாந்து தங்களுக்கு “தேவை” என ட்ரம்ப் பிடிவாதமாக கூறி வருவது டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) , நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது அந்த ராணுவக் கூட்டமைப்பின் முடிவாக அமையும் என எச்சரித்துள்ளார்.
பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் டென்மார்க்கிற்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே ஸ்டீபன் மில்லரின் மனைவி கேட்டி மில்லர், அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட கிரீன்லாந்து வரைபடத்தை “விரைவில்” (SOON) என்ற வாசகத்துடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது, அமெரிக்கா கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கத் திட்டமிடுகிறதா என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே மேலும் வலுப்படுத்தியுள்ளது.





