H-1B விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்திய ட்ரம்ப் நிர்வாகம் – இந்தியா விடுத்த எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் H-1B விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளார்.
ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு இன்று (21.09) முதல் அமுலுக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த விசாவை அதிகளவில் சார்ந்திருப்பவர்கள் இந்தியர்கள் தான். பெரும்பாலான இந்திய பிரஜைகள் இந்த விசாவின் கீழ் அமெரிக்காவில் பணிப்புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏறக்குறைய 70 சதவீதமான இந்தியர்கள் இந்த திடீர் அறிவிப்பால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த தீர்மானமானது தற்போதைய விசாக்கள் அல்லது புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு பொருந்தாது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கமைய புதிய விதியானது இந்த விசா திட்டத்தின் ஊடாக அமெரிக்கா செல்ல எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் என ஊகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த புதிய நடைமுறை மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் உள்ளிட்ட பரஸ்பர நன்மைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு சமீபத்திய நடவடிக்கைகளை கொள்கை வகுப்பாளர்கள் மதிப்பிடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதை தடுத்து நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு வழிகளை கையில் எடுத்துள்ளது. முன்னதாக 50 சதவீத பொருளாதார வரிகளை விதித்திருந்தது. இருப்பினும் இந்தியா அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறான ஒரு சூழலில் இந்திய மாணவர்களுக்கு மேலும் அழுத்ததை கொடுக்கும் வகையில் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.