இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து – அடையாளம் காணப்படாத எண்ணற்ற உடல்கள்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத எண்ணற்ற உடல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் உடல்களை அடையாளம் காண்பிப்பதற்கு இறந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.
இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.
அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 301பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பல உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த நிலையில் உடல்களை அடையாளம் காண ரயிலில் பயணித்த நபர்களின் உறவினர்களுக்கு மாநில அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஓடிஷாவின் பல்வேறு மருத்துவமனைகளில் ரயில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்கள் விவரம் கீழ்கண்ட இணைய தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத உடல்களின் விவரங்கள் ஒடிசா அரசின் srcodisha.nic.in இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.