விளையாட்டு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியிடமிருந்து இன்று அழைப்பு
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிர்வாகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டை விரைவில் மீண்டும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால கிரிக்கெட் குழு நியமனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தனது கவனம் கிரிக்கெட்டில் இருப்பதாகவும், மற்ற உறுப்பினர்கள் நிர்வாகத்தை கையாள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கிரிக்கட் இடைக்கால குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இடைக்கால கிரிக்கெட் குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று வெளியிட்டார்.
அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பிலான சிறப்பு அறிக்கையின்படி, கிரிக்கெட் நிர்வாகக் குழு செய்ததாக கூறப்படும் ஊழல், முறைகேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவது அவசியம் என்பதால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இலங்கை கிரிக்கெட்டில் உத்தியோகபூர்வ தேர்தல் நடைபெறும் வரை அல்லது மறு அறிவித்தல் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த புதிய இடைக்கால குழு நியமனத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாக சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவுள்ளன.