திஸ்ஸ விகாரை சர்ச்சை: கொழும்பு தமிழர்களை அழைக்கிறது மஹிந்த அணி!
“ யாழ்.தையிட்டி விகாரை விடயத்தில் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. இதற்கு எதிராக கொழும்பில் வாழும் இந்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கை பௌத்த நாடென்பதை வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
திஸ்ஸ விகாரையில் பௌத்தர்களுக்கு வழிபாடு நடத்துவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகின்றது.
இவ்வாறு செய்துவிட்டு கொழும்புக்கு வந்து சுதந்திரமாக கோவில்களுக்கு சென்று வருகின்றனர். இலங்கை பௌத்த நாடென்பதததால்தான் இவ்வாறு சுதந்திரம் காணப்படுகின்றது.
இந்நாட்டில் வேறு மதம் பெரும்பான்மையாக இருந்திருந்தால் இந்நிலைமை இருக்காது. பௌத்த தர்மத்தில் பொறுமை குறித்து போதிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸ விகாரைக்கு பெரும் அநீதி நடக்கின்றது. கோவில்களை அகற்றுமாறு பௌத்த மக்கள் ஒருபோதும் போராடியது கிடையாது. எனவே, கொழும்பில் வாழும் இந்து, தமிழ் மக்கள் மேற்படி அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.” என்றார் சரத் வீரசேகர.





