தைபேயில் கத்திக் குத்துத் தாக்குதல்: 3 பேர் பலி, 11 பேர் காயம்
தாய்வான் தலைநகர் தைபேயில் நேற்று மாலை கூரிய ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
27 வயதான சாங் வென் என்ற சந்தேக நபர், தைபேயின் பிரதான மெட்ரோ நிலையத்தில் முதலில் புகை குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பரபரப்பான ஷாப்பிங் பகுதியில் உள்ள மற்றொரு நிலையத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகக் கத்திக் குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை அடுத்து, அந்த நபர் ஆறு மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்ததாகத் தாய்வான் பிரதமர் சோ ஜங்-தை (Cho Jung-tai) உறுதிப்படுத்தியுள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் மிகக் குறைவாகக் காணப்படும் தாய்வானில், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறானதொரு பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





