இந்தோனேசியாவில் மண்டபக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூவர் பலி, டஜன் கணக்கானோர் காயம்

இந்தோனீசியாவின் ஜாவா தீவில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.
செப்டம்பர் 3ஆம் தேதியன்று மேற்கு ஜாவாவின் போகோர் மாவட்டத்தில் உள்ள அந்த சமூக மண்டபத்தில் ஏறத்தாழ நூறு பேர் குர்ஆன் ஓதுதல் நிகழ்வில் கலந்துகொண்டபோது கட்டடம் இடிந்து விழுந்ததாக இந்தோனீசியப் பேரிடர் நிர்வாகப் பிரிவின் அதிகாரி முகம்மது ஆடம் ஹம்டானி தெரிவித்தார்.
கட்டடத்தில் இருந்தோரில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
“முதற்கட்டமாக வெளியிடப்பட்ட தரவுகளின்படி 84 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூவர் உயிரிழந்தனர்,” என்று ஆடம் கூறினார்.
கட்டடத்தில் அளவுக்கு அதிகமானோர் கூடியதாக அவர் தெரிவித்தார்.இதுவே அது இடிந்து விழுந்ததற்கான காரணமாக இருக்கக்கூடும் என்றார் அவர்.
காயமடைந்தோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் பலருக்கு இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.