வன்முறைக்கு காரணமானவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவர் – சிரியாவின் புதிய ஜனாதிபதி

சிரியாவின் கரையோர மாகாணங்களான டர்டாஸ், லடாக்கியாவில் வன்முறைக்கு காரணமானவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள் என்று சிரியாவின் புதிய ஜனாதிபதி அஹமட் அல் சஹரா தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சியின் ஊடாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சாதாரண மக்கள் இரத்தம் சிந்தக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மோசமான விளைவுகளைச் சந்திப்பார்கள். இங்கே எல்லோரும் சட்டத்துக்கு முன் சமம்.
கலவரப் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரிய மக்களின் இரத்தம் படிந்த கைகள் கொண்டவர்கள் வெகு விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
தேசிய ஒருமைப்பாட்டை நாம் பேண வேண்டும். உள்நாட்டில் அமைதி வேண்டும். நாம் அனைவரும் அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும்.
நாம் ஒரு சிக்கலான சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம். முன்னாள் ஆட்சியாளர்கள், அவர்களுக்கு ஆதரவு தரும் அந்நியர்கள் புதிய கலவரத்தை மூட்டிவிட்டுள்ளனர்.
நமது ஒற்றுமையை, ஸ்திரத்தன்மையைக் குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு எவரும் இடம் கொடுக்கலாகாது.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.