இது தோனியை அவமானப்படுத்தும் செயல் – சிஎஸ்கேவுக்கு எதிராக நின்ற காவ்யா மாறன்
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கும் வகையில் அவரை உள்ளூர் வீரராக அறிவிக்க வேண்டி சில விதி மாற்றங்களை பிசிசிஐ செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சமீபத்தில் நடந்த ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர வேறு எந்த அணியும் இந்த விதி மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இதை கடுமையாக எதிர்த்து இருக்கிறார்.
இந்த விதியை கொண்டு வந்தால் மூத்த வீரர்களை நாம் அவமானப்படுத்துவது போல இருக்கும் எனவும், தோனி போன்ற ஒரு வீரர் இந்தியாவுக்காக பல சாதனைகளை செய்த பின் உள்ளூர் வீரர் என அறிவிப்பது அவரை கீழ்மைப்படுத்தும் செயல் எனவும் அவர் சுட்டிக் காட்டியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தவிர்த்து நான்கு வீரர்களை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும், தோனிக்கு அதிக சம்பளம் கொடுத்தால் மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்குவது சிக்கலாகிவிடும்.
அவரை உள்ளூர் வீரராக அறிவித்தால், அதன் மூலமாக அவரை குறைந்த சம்பளத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
அதன் மூலம், தோனி சிஎஸ்கே அணியில் ஆடுவதோடு மட்டுமில்லாமல், அவருக்கான சம்பளத்தை குறைத்து அதை மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தனக்காக அதிக சம்பளத்தை வீணடிக்க வேண்டாம், அணியின் நலனுக்கே முக்கியத்துவம் அளியுங்கள் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி கூறி இருக்கிறார்.
அதனால் சிஎஸ்கே நிர்வாகம், பிசிசிஐ நடத்திய ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு மேல் சர்வதேச போட்டிகளில் ஆடாத இந்திய அணி வீரர்களை, உள்ளூர் வீரர்கள் என அறிவிக்கும் வகையில் விதியில் மாற்றத்தை செய்யுமாறு கோரிக்கை வைத்தது.
இது 2021 வரை அமலில் இருந்த விதி. பின்னர் அது நீக்கப்பட்டது.
அந்த விதியை தோனிக்காக மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மற்ற ஐபிஎல் உரிமையாளர்கள் எதிர்ப்பு கூறி உள்ளனர்.
இந்த விதி தேவையற்றது என்பது அவர்களின் கருத்தாக இருந்துள்ளது. அதில் காவ்யா மாறன் தான் அதிக எதிர்ப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.
எனினும், பிசிசிஐ அவர்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளவில்லை.
தோனி, 2025 ஐபிஎல் தொடரில் ஆடினால் அது ஐபிஎல்-க்கு மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் என்பதை உணர்ந்து இருக்கும் பிசிசிஐ அவரை உள்ளூர் வீரராக அறிவிக்கும் வகையில் விதியை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.