போர் காலத்தில்கூட இப்படி நடக்கவில்லை…பதறுகிறது மொட்டு கட்சி!
“போர் காலத்தில்கூட இல்லாதளவுக்கு நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடமெடுக்கப்படும் எனக் கூறியவர்கள் என்ன செய்துகொண்டுள்ளனர்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கை மூன்று போர்களை எதிர்கொண்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி. சிவில் போரை ஏற்படுத்தியது. 2ஆவது புலிகளால் போர் முன்னெடுக்கப்பட்டது. 3ஆவது 1989 இல் ஜே.வி.பியால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை.
மேற்படி காலப்பகுதியில்கூட இல்லாத அளவுக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் 111 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வருடத்துக்குள் 47 நாட்களுக்குள் 9 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தவறுகளை, குறைகளை சுட்டிக்காட்டும் தரப்பினருக்கு ஏதோவொரு விதத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சியில் காவி உடை மற்றும் கறுப்பு உடை இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடமெடுக்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று என்ன செய்து கொண்டுள்ளனர்? இது தேசிய மக்கள் சக்திக்குரிய நாடு அல்ல. எம் அனைவரதும் நாடாகும்.
எனவே, நாட்டை நாசமாக்குவதற்கு இடமளிக்க முடியாது.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.





