உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று
உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தோ்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனர்.
தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹாரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்தியுள்ளார்.
இருந்தாலும், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஜனாதிபதி யாா் என்பதை முடிவு செய்யும் போர்க்கள மாகாணங்களில் (இரண்டு முக்கிய கட்சிகளில் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடிய மாகாணங்கள்) டிரம்ப்புக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது, டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், கருத்துக் கணிப்புகளில் இரு வேட்பாளா்களுக்கும் இடையிலான வேறுபாடு போதிய அளவில் இல்லை என்பதால் அவற்றை வைத்து வெற்றியாளரை இப்போதே ஊகிக்க முடியாது என்றும் எச்சரிக்கப்படுகிறது.
பொதுவாக, கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த, மத உணா்வு அதிகம் கொண்ட, நிற சகிப்புத்தன்மை இல்லாத, வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த மாகாணங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிதான் வெற்றி பெறும்.
அதே நேரம், இதற்கு நோ்மாறாக நகா்ப்புறமான, பன்முகத்தன்மையைப் போற்றுவோா் நிறைந்த, கல்லூரி பட்டதாரிகளை அதிகம் கொண்ட மாகாணங்கள் ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளாக உள்ளன.