புருவத்தை திருத்தம் செய்த மனைவி… போனில் தலாக் சொன்ன கணவன்!
உத்தரப்பிரதேசத்தில் புருவத்தை திருத்திய இளம்பெண்ணுக்கு அவரது கணவர் போனில் தலாக் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பாட்ஷாஹி நகரைச் சேர்ந்த இளம்பெண், கடந்த 2022ம் ஆண்டு பிரயக்ராஜைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அந்த இளம்பெண் அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், அக்.4ம் திகதி கான்பூரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் அந்த இளம்பெண் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அந்த பெண்ணுக்கு அவரது கணவர் சவுதி அரேபியாவில் இருந்து வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அந்த பெண் தனது புருவத்தைத் திருத்தியிருந்தார். இதைப் பார்த்து ஏன் புருவத்தைத் திருத்தினாய் என்று கேட்ட கணவர், அதைக் கண்டித்துள்ளார். அத்துடன் வீடியோ காலை கட் செய்து விட்டு தொலைபேசியில் அழைத்து மனைவிக்கு தலாக் கூறியுள்ளார். ஆனால், இளம்பெண் எடுத்துக் கூறியும் அதை அவரது கணவர் காதில் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், அக்டோபர் 12ம் திகதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அவரது கணவர் மீது பிரயாக்ராஜ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.