இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த கைக் கொடுக்கும் அமெரிக்கா!
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையம் (USAID) இலங்கையின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சுங் இன்று தெரிவித்தார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளதுடன், அந்த ஆதரவானது நாட்டில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஊடாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வாழ்த்துக்களை தூதுவர் சுங் தெரிவித்தார்.
மோசடி மற்றும் ஊழலை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் முன்முயற்சிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அமெரிக்கா வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
நல்லாட்சிக்கான முயற்சிகளுக்கு உதவுவதற்கும் இலங்கையின் பாதுகாப்பை தேவையான போதெல்லாம் உறுதிப்படுத்துவதற்கும் அமெரிக்கா தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துதல், ஏற்றுமதி சார்ந்த விவசாயத் தொழிலை வளர்ப்பது மற்றும் கிராமப்புற வறுமையைப் போக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் புதிய ஜனாதிபதியின் திட்டங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது.
கிராமப்புற பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கும் தற்போதைய திட்டம் எதிர்காலத்தில் நகர்ப்புற பள்ளிகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படும் என்று திருமதி சுங் கூறினார்.