வெளிநாட்டு மாணவர்களின் விசாவில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய அமெரிக்கா!

அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசாவில் கட்டுப்பாடுகளை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வெளிநாட்டு மாணவர்கள், தொழிலாளர்கள், வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கான விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படும் கால அளவு கட்டுப்படுத்தப்படும்.
இந்த புதிய விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்து உள்ளது. சட்டவிரோதமாக தங்குபவர்களை கண்டு பிடிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் இந்த மாற்றம் தேவை என்று உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.
சர்வதேச மாணவர்கள் விசா (எப்) மற்றும் கலாச்சார பரிமாற்றத் திட்டங்களில் பார்வையாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் விசாக்களுக்கு இனி அதிகபட்சமாக 4 ஆண்டுகள் தங்கியிருக்க கால அவகாசம் கொடுக்கப்படும். காலஅவகாசத்தை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது படிப்பு மற்றும் வேலையில் இருக்கும்வரை விசா காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாவுக்கு காலக்கெடு விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு வேலை தேட 60 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த அவகாசம் 30 நாட்களாக குறைக்கப்படுகிறது.
முதுகலை படிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திட்டத்தில் இருந்து இன்னொரு பாடத்திட்டத்திற்கு மாற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஊடக பிரதிநிதிகளுக்கான விசா வைத்திருப்பவர்கள் 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.