ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம் – மனம் திறந்த விராட் கோலி!

ஆர்சிபி அணியின் 2025 ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரமான சம்பவம் குறித்து விராட் கோலி தனது மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த ஜூன் 4, 2025 அன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பை வெற்றியைக் கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியான தருணத்தை பெரும் சோகமாக மாற்றியது.
இந்த நிலையில், ஆர்சிபி வீரர் விராட் கோலி, ”ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்” என்று உருக்கமாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஆர்சிபி நிர்வாகம் உரிய அனுமதி பெறாமல் விழாவை அறிவித்ததாக கர்நாடக அரசு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, விராட் கோலி இடம்பெற்ற வீடியோ ஒன்று, ரசிகர்களை இலவசமாக வெற்றி விழாவில் பங்கேற்க அழைத்ததாகவும், இது கூட்ட நெரிசலைத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த துயரத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஆர்சிபி அணி ‘RCB Cares’ என்ற முயற்சியை அறிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவிக்கு அப்பாற்பட்ட ஆதரவையும், ரசிகர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளது.