6000க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகையை வரவேற்றுக் கொண்டாடிய சுற்றுலா பணியகம்!
கோடிலியா சுற்றுலா கப்பல் மூலம் ஜுன் 16 முதல் 9 தடவைகளாக காங்கேசன்துறை ஊடாக யாழ்ப்பாணம் வந்த 6000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வு காங்கேசன்துறை வலி வடக்கு பிரதேச சபை கட்டடத்தில் நேற்றையதினம் (15-09-2023) நடைபெற்றது.
வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் தூதுவரக அதிகாரி ராம் மகேஷ் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுலாவிகள் வரவேற்கப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு உபசார சேவை மற்றும் போக்குவரத்துச் சேவையை வழங்கியவர்களும் நன்றி கூறி கௌரவிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக தலைவர் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆரம்பத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட உள்ளூர் உற்பத்திகளுக்கான காட்சிக்கூடங்களை இந்தியத் துணைத்தூதுவர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டதுடன், உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களுக்கு சுற்றுலாப் பயணிகளால் கிடைத்துவரும் நன்மைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதேபோல், சுற்றுலாப் பயணிகளுக்கான முச்சக்கரவண்டி, தனியார் வாகன சேவையை வழங்கி வரும் போக்குவரத்துச் சங்கங்கள் மற்றும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கும் அவர்கள் வழங்கிவரும் சேவைக்காக நன்றி பாராட்டப்பட்டது.
மேலும், ஆரம்பம் முதல் சுற்றுலாவிகளை வரவேற்கும் இந்த ஏற்பாட்டை களத்தில் ஒருங்கிணைத்துச் செயற்படுத்திவரும் தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசசபை உத்தியோகத்தர்களுக்கும் நன்றி பாரட்டப்பட்டது.
நிகழ்வின் சிறப்பம்சமாக, வலிகாமம் வடக்கு கட்டுவன் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர்களின் ஒயிலாட்டம் நிகழ்வும் இடம்பெற்றதுடன், அந்தக் கலைஞர்களும் நன்றி கூறிப் பாராட்டப்பட்டனர்.
தற்போதைய காலநிலைச் சூழ்நிலை காரணமாக அடுத்துவரும் மாதங்களில் கோடிலியா சுற்றுலாப் பயணக் கப்பல் சேவை நடைபெறாது என்றபோதும், மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இந்தச் சேவை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்த இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ், மேலதிகமாக, காங்கேசன் – நாகபட்டினம் நாளாந்த கப்பல் சேவையும் ஆரம்பிக்கும் எனவும், இதன்மூலம் வடக்கு மாகாண மக்கள் இன்னும் பல நன்மைகளை அடைவர் என்று இங்கு உரையாற்றும்போது தெரிவித்துள்ளனர்.