கோடாரி தைலத்தின் கதை!
90களில் இந்த தைலம் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். எடுத்துச் செல்ல இலகுவாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தைலம் மலிவு விலையும் கிடைத்தது. இதனாலேயே ஏழைகளின் நண்பனாக மாறிபோனது இந்த கோடாரி தைலம்.
இந்த தைலம் தோன்றிய வராறு பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த தைலம் சிங்கப்பூரில் கண்டுப்பிடிக்கப்பட்டாலும், இதனை கண்டுப்பிடித்தவர் சீனாவை சேர்ந்தவர்தான். 1928ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த லியூங் யுன் எனும் சீனர், ஷ்மிட்லர் (Dr.Schmeidler) எனும் ஜெர்மானிய மருத்துவர் அளித்த மருத்துவ குறிப்புகளைக் கொண்டு கோடாலி தைலத்தை தயாரித்திருக்கிறார்.
1930 ஆம் ஆண்டுகளில் இந்த தைலத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையான வியாபார போட்டி சந்தைகளில் இருந்து வந்தது. தலைவலி, உடல்வலிக்கான நிவாரணமாக சீன தயாரிப்புகள் கடும் போட்டியை அளித்ததால் நிறுவனத்தின் சின்னத்தை (Axe) என வித்தியசமாக வடிவமைத்தார் லியூங் யுன்.
அதன் பிறகு துண்டு சீட்டின் மூலம் தைலத்தின் பயன்களை விவரித்து சிங்கப்பூர் முழுவதும் வீடு வீடாக விநியோகம் செய்தார். துண்டு பிரசுரங்கள் தான் கோடாரி தைலத்தின் பிரதான வியாபார உத்தியாக அமைந்தது.
கடல்வழிப் பயணமாக சவுதிக்கு ஹஜ் யாத்திரை சென்றவர்களுக்கு ஏற்படும் கடல்நோய்களான வலிநிவாரணியாக கோடாரி தைலம் மாறியது. இதனால் சவுதியிலும் பெரிய வியாபார வாய்ப்பை பெற்றது கோடாலி தைலம்.
1971 ஆண்டு நிறுவனர் இறந்தபின் அவருடைய மூத்தமகன் பொறுப்பேற்றார். இன்று ஆசியாவில் சிறந்த தைலமாகவும். சிங்கப்பூரின் (Heritage Brand in Singapore ) ஆகவும் இருந்து வருகிறது.
வலி உள்ள இடங்களில் கோடாரி தைலத்தின் சில துளிகளை இட்டு நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும். இப்படியாக அன்றுமுதல் இன்று வரை கோடாரி தைலம் வீட்டின் நண்பனாகவே மாறியது.